Thursday, May 18, 2023

இவங்களெல்லாம் யாருங்க யுவரானர்?


 

இவங்களெல்லாம் யாருங்க யுவரானர்?

பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுங்கன்னு கேக்குறாங்களே இவங்க எல்லாம் யாருங்க யுவரானர்?

எங்கிருந்து வந்தாங்க எதுக்கு கேக்குறாங்க?

பல தலைமுறையா ஒரு சில பிரிவினருக்கு அடிமையாயிருந்து கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அந்த முதலாளி கொடுக்குற கூலிய வாங்கிட்டு நான்தான் இப்படி இருந்தேன் என் தலைமுறை இப்படி இருக்கக்கூடாதுன்னு எப்படியாவது கஷ்டப்பட்டுதன் பிள்ளைகளை படிகவைச்சு அந்த பிள்ளைகளும் அரசு இட ஒதுக்கீட்டை முறையா பயன்படுத்தி ஏதோ ஒரு அரசு வேலையில் சேர்ந்து ஓரளவிற்கு முன்னேறியவுங்க யாரும் கேக்கல கேக்கவும் தோணல ஏனா அந்த தலைமுறையினர் புரிஞ்சுக்கிட்டாங்க நாம முன்னேறனும்னா படிக்கணும் கல்வி ஒன்னுதான் நமக்கு முக்கியம்ன்னு இருந்தாங்க

ஆனா அதற்கு பிறகு வந்த தலைமுறையினர் ஒருசிலர் குடும்ப சூழ்நிலையால முறையா பள்ளிக்கூடம் போகமுடியல அவுங்க பெற்றோரும் கல்வியின் அவசியத்த அவுங்களுக்கு புரிய வைக்கல

ஏதோ ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க பணத்த பாத்தவுடன் பணம்தான் முக்கியம் பணம் இருந்தா இங்கு எதையும் ஆளமுடியும் அதிகாரம் பன்னமுடியும்ன்னு நினைச்சுட்டாங்க அந்த பணம் இவர்களின் அறிவை மறைச்சுடுச்சி இவர்கள் தன் சந்ததியினருக்கு அறிவை கொடுக்கணும்னு நினைக்கல சொத்து சேத்துவைச்சா போதும்ன்னு இருக்காங்க,அரசால் கிடைக்கக்கூடிய எந்த நல திட்டங்களை பற்றியும் தெரிஞ்சுக்க விருப்பமில்ல ஏனா பணம் எல்லாவற்றையும் மாத்திடும் என்கிற மன நிலை  

அதே நேரத்தில் இவங்க இட ஒதுக்கீடு பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெரிஞ்சிக்க விரும்பல இட ஒதுக்கீடு நம்மள மத்தவுங்ககிட்ட இருந்து பிரிக்கிதுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க இதுக்கு பின்னாடி எத்தனை பேருடைய அற்பணிப்பு இருக்கு அதை பற்றியெல்லாம் அவுங்களுக்கு தெரியாது 

அரசு ஒன்னும் சும்மா கொடுக்கல இத இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் கொண்டு வந்து பல காலங்களாக பின் தங்கியிருந்தவுங்க முன்னேறனும்னு கொண்டுவந்திருக்கு இத புரிஞ்சுக்காம யாரோ ஒரு அரசியல்வாதி சொல்றான்னு அவன் பேச்ச கேட்டுக்கிட்டு இருக்காங்க,சொல்ற அரசியல்வாதி இதே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னுக்கு வந்து பல தலைமுறைக்கு சொத்து சேத்து வைச்சுருக்கான்.இதெல்லாம் இவங்களுக்கு தெரியாது,

அந்த அரசியல்வாதி நடத்துற பள்ளி,கல்லூரியில் போய் நானும் உங்க சாதிக்காரன்தான் என் பிள்ளைக்கு உங்க பள்ளி கல்லூரியில் இலவச சீட்டு கொடுங்கன்னு கேட்டா கொடுக்க மாட்டான் ஏனா அவன் இவங்கள வைத்து அரசியல் செய்றவன் இது இவங்களுக்கு இன்னும் தெரியல.

இவங்களுக்கு  இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கின்ற அடிப்படை கல்வி,வேலைவாய்ப்பு இதபத்தியெல்லாம் கவலையில்ல சாதிதான் முக்கியம் அதிலும் நான் உயர்ந்த சாதின்னு எல்லாருக்கும் தெரியனும் அதுதான் அவுங்களுக்கு முக்கியம்

இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் யாரையும் பிரிக்கவோ வேருபடுத்தவோ அல்ல பல காலங்களாக கல்வி,பொருளாதரத்தில் பின் தங்கியவர்களும் முன்னேற வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்திய அரசியல் சாசனம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.இவர்கள் இனிமேலாவது இதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

Friday, May 12, 2023

பட்டியலின வெளியேற்றம் தேவையா?இல்லையா?

 

வெளியேற்றுங்கள்!

கடந்த இரண்டு வருடமாக அதற்கு மேலாகவும் ஒரு பிரிவினர் சொல்லிக்கொண்டிருப்பது

முதலில் ஒரு விசயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்

எனக்கு மதம்,சாக்கடை இதில் உடன்பாடில்லை

 அவர்கள் சொல்லும் காரணம் நாங்கள் உயர்ந்த பிரிவைச்சேர்ந்தவர்கள் எங்களை இதில் இருந்து வெளியேற்றுங்கள் என்கிறார்கள்

 ஒரு விஷயத்தை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்

இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்ததன் நோக்கம் மற்றவரிடமிருந்து வேறுபடுத்தவோ பிரிப்பதற்க்கோ அல்ல பல நூற்றாண்டாய் ஒடுக்கப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் இருந்தவர்களுக்கு கல்வி பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பை பெற்று அவர்களும் முன்னேற வேண்டும் என்கிற நோக்கில்தான் உருவாக்கப்பட்டது

 இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில்தான் 1921ல் பிராமணர் அல்லாத வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கவதற்கான வகுப்புரிமை ஆணை வெளியிடப்பட்டது.

திரும்ப 1928 ல் கடும் எதிர்ப்புக்கு நடுவே வகுப்புரிமை ஆணை நடைமுறைபடுத்தப்பட்டது 

1950ல் அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தும் போது, பல நூற்றாண்டாய் ஒடுக்கப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் இருக்கும் எஸ்.சி/ எஸ்.டி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என, அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்க்கீடு வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி, இந்தியா முழுவதும் இருக்கும் எஸ்.சி/எஸ்.டி மக்களின் மக்கள் தொகை அடிப்படையில் எஸ்.சி பிரிவுக்கு 15 %, எஸ்.டி பிரிவுக்கு 7.5 % இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், பாராளுமன்ற ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது பற்றிய முழு விவரம் ஏற்கனவே நவீன புத்தர் என்னும் பதிவில் சொல்லியிருக்கிறேன் எனவே சுருக்கமாக இங்கு 

இறுதியாக தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது 

இதில் ஒரு பிரிவினர் எங்களை பட்டியலின பிரிவில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் 

69% இட ஒதுக்கீட்டில் 18%, பிரிவில் வருபவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் 

தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18%, பிரிவில் வருபவர்கள் 1,44,36,620 பேர் இது அன்றைய தமிழக மொத்த மக்கள்தொகையில் 20.01%

இதுல 76 உட்பிரிவுகள் இருக்கு இந்த 76 உட்பிரிவுகளுக்கும் சேர்த்துதான் 18%

நான் சொல்ல விரும்புவது தோராயமாக 1960 ல் இருந்து இன்றுவரை அல்லது 2020 வரை வைத்துக்கொண்டால் 60 வருடம் இந்த 60 வருடங்களில்  18%, இட ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை சதவிகிதம் பேர் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள்?

இன்னமும் கிராமங்களில் பொருளாதார சூழ்நிலையால் அரசு பள்ளிக்கூடத்திற்குக்குகூட போகமுடியாமல் கல்வியை முழுமையாக படிக்கமுடியாதவர்கள் இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறினால் வரும் சந்ததியினரின் கல்வி வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்,

இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதற்கு முன் இதை பயன்படுத்தி கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்து பொருளாதாரத்தில் முன்னேறியவர்களின் பங்கு என்ன?இவர்கள் அந்த சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்?

எதார்த்தம் எதுவும் செய்யமுடியாது காரணம் அவர்கள் முன்னேறத்தான் பார்ப்பார்களே தவிர அடுத்தவர்களை பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது அப்படி இருக்கையில் எவனோ ஒரு அரசியல் வாதி அவனுடைய சுய நலத்திற்காக செய்கிறான் என்றால் அதற்கு கற்றவர்களும் துணை நிற்க வேண்டுமா?

எங்கிருந்து வந்தது ஆண்டபரம்பரை? 

ஒருவன் நாங்கள் ஆண்டபரம்பரை நீங்கள் எனக்கு கீழே  சொன்னால் சொல்லட்டும் அப்படி சொல்பவனை கல்வியால் விழ்த்தவேண்டுமே தவிர இப்படி பிரிவில் இருந்து வெளியேறி நானும் ஆண்டபரம்பரை என்று சொல்வதானால் அல்ல.

தொடரும்....பதிவு 






Thursday, May 4, 2023

ஒரு குட்டி ஸ்டோரி “நடையும் நானும்”

(ஒரு பக்கத்தில் சொல்லிவிடலாம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் அந்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச்சென்றுவிட்டது,பொதுவாக நான் எழுத ஆரம்பித்தால் எழுத்துகளின் போக்கிலேயே விட்டுவிடுவேன் அப்படித்தான் இந்த நடையும் நானும் ஸ்டோரியும்.)

நடப்பது எனக்கு பிடித்த ஒன்று எப்பொழுது கவினர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய எண்ணங்கள் ஆயிரம் என்னும் புத்தகத்தை படித்தேனோ அன்று தோன்றியது நடக்கவேண்டும் என்று

1994 கடைசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன் முதன் முதலாக சென்னையில் இருந்து தனியாக மூணார் செல்கிறேன் அப்பொழுது சென்னையில் உள்ள திருவள்ளுவர் போக்குவரத்துக்கழுகம் பேருந்து நிலையத்திற்கு வெளியே தெருவோர புத்தக கடையில் 7 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகம்தான் கவினர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய எண்ணங்கள் ஆயிரம்

இன்றைய தலைமுறையினருக்கு அந்த காலகட்டத்தில் இருந்த போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் தெரிய வாய்ப்பில்லை ஆம் எல்லாம் திராவிடம் தமிழையும் தமிழின் வரலாற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்

(அன்று இருந்த போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்டைய காலத்தில் ஆட்சி செய்த பேரரசுகளின் பெயரில் இருந்தது,

சில உதாரணம் மதுரை பாண்டியன் போக்குவரத்துக்கழகம்,சென்னை பல்லவன் போக்குவரத்துக்கழகம்,திருச்சி சோழன்  போக்குவரத்துக்கழகம்,கோயம்புத்தூர் சேரன் போக்குவரத்துக்கழகம்,திருநெல்வேலி கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகம்,திண்டுக்கல் இராணிமங்கம்மாள் போக்குவரத்துக்கழகம்,வேலூர் பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக்கழகம் இப்படி பெயரில் இருந்தது இதில் சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லும் சேவை திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் என்று இருந்தது.) 

அந்த புத்தகத்தை படித்து முடித்த போது எனக்கும் எழுதவேண்டும் என்று ஒரு உந்துதல் ஏற்பட்டது நிறைய விசயங்கள் அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார் எல்லாம் எளிய முறையில் புரியும்படி இருக்கும்

நான் முதன்முதலில் தனியாக கல்கத்தாவிற்கு 1997 ல் சென்றேன் ஆங்கிலமும் தெரியாது இந்தியும் தெரியாது இங்கிருந்து போகும்போதே கொஞ்ச ஆங்கில வார்த்தைகளை நண்பர்களிடம் கேட்டு ஒரு பேப்பரில் எழுதி எடுத்துச்சென்றேன் சென்னையில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயிலில் போனேன் மறுநாள் மதியம் 01:30 மணிக்கு

கல்கத்தாவின் ஹவுரா இரயில் நிலையத்திற்கு செல்லும் முன்னே இரயிலில் இருந்து பார்த்தபோது ஹவுரா  பாலம் என்னை வரவேற்றது அதன் அழகில் மயங்கிப்போனேன் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளித்தது

இப்பொழுதும் எனக்கு நினைவிருக்கிறது நான் பார்த்த அந்த காட்சி பாலத்தின் கிழக்கு பக்கம்தான் நான் பார்த்த முதல் காட்சி  உயரமான இரும்பு கம்பிகளுக்கு வெள்ளி மூலாம் வண்ணம் பூசப்பட்ட அந்த பாலம்

இரயில் தமிழ்நாட்டை விட்டு ஆந்திர எல்லையை தொட்டவுடனே காதில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேச்சு கேட்பது குறைந்து தெலுங்கும் இந்தியும் கேட்க ஆரம்பித்தது ஒரு பகல் ஒரு இரவு அடுத்த நாள் மதியம் வரை பயணம்

ஹவுரா வரும்வரை மூன்று மொழிகள் கொஞ்சம் காதில் விழுந்துகொண்டே இருந்தது தெலுங்கு இந்தி ஒரியா

இறங்கினேன் நான் போகவேண்டிய இடத்திற்கு செல்ல வழிகேட்கவேண்டும் யாரிடம் கேட்பது எப்படி கேட்பது ஒன்றுமே புரியவில்லை நண்பர்கள் எழுதிகொடுத்த பேப்பரில் இருந்த அந்த ஆங்கில வார்த்தையை ஹவுரா இரயில் நிலையத்தில் இருந்த உதவி மைய அறையில் ஒரு பெண் இருந்தார் நல்ல கலர் உதட்டில் சிகப்பு நிற சாயம் பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருந்தார் அந்த பெண்மணி அந்த பெண்மணி மட்டுமல்ல அங்கிருந்த எல்லா பெண்களுமே ரொம்ப அழகாக இருந்தார்கள் அவர்கள் பேசுவது இந்தியா வங்காள மொழியா என்னவென்றே தெரியவில்லை

ஒருவித பதற்றத்துடன் அந்த பெண்மணியிடம் கேட்டேன் அந்த பெண்மணி வேகமாக கொஞ்சம் கத்தி ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியல

அந்த பெண்மணி மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் பேசுவது எதுவுமே புரியல கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது அன்று

அப்பொழுதுதான் கவினர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது எந்த புதிய ஊருக்கு சென்றாலும் முதலில் அங்கு கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்ணால் கவனியுங்கள் மொழி புரியாவிட்டலும் அவர்கள் செய்கையை புரிந்துகொள்ளமுடியும் அதைதான் அன்று நான் செயல்படுத்தினேன்,

ஹவுரா இரயில் நிலையத்தை விட்டு வெளியே போனேன் புதிய ஊர், புதிய மொழி, புதிய உடை, புதிய கலாச்சாரம் ரொம்பவே வித்தியசமாக இருந்தது அவர்கள் பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்கள் அதனால் ஆங்காங்கே எச்சில் துப்ப தனியாக ஒரு மண் தொட்டி வைக்கப்பட்டிருந்தது

ஹவுரா இரயில் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தது மக்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள் முதலில் தெருவோர கடைகளை கவனித்தேன் டீ குடிக்கவேண்டும், சாப்பிடவேண்டும் எல்லாத்துக்கும் காசு கொடுக்கணும் அதுக்கு எவ்வளவு காசுன்னு எனக்கு தெரியனும் அன்று அங்குள்ள தெருவோர கடைகளில் டீ ஒரு ரூபாய் தான் அதுவும் மண்ணால் செய்யப்பட்ட அழகான குடுவையில் சூடாக கொடுப்பார்கள் நன்றாக இருக்கும்

அன்று செல்போன் இல்லை,ஸ்மார்ட்போன் இல்லை ஜிபிஸ் இல்லை ஒருவழியாக ஹவுரா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன் எனக்கு இந்தியும் தெரியாது வங்காள மொழியும் தெரியாது அங்கிருப்பவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஒரு நான்கு வார்த்தைகள்தான்

என்ன செய்வதென்று தெரியாமல் ஹவுரா பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தேன், அன்றே அங்கு மினி பேருந்துகள் அதிகம் இருந்தது அன்றுதான் தெரிந்தது நமது தமிழ்நாடு போக்குவரத்து துறையிலும் சரி மற்ற சுற்றுப்புற சுகதரத்திலும் சரி கல்கத்தாவைவிட எவ்வளவோ மேல் என்று

சுற்றிலும் நோட்டமிட்டேன் நிறைய பீடா கடைகள் இருந்தது கொஞ்சம் தள்ளி துரத்தில் ஒரு மெடிக்கல்ஷாப் கடையை பார்த்தேன் மெடிக்கல்ஷாப்பில் ஆங்கில புழக்கம் இருக்கும் உடனே அங்கு சென்று நான் எழுதி வைத்திருந்த பேப்பரில் உள்ளதை படித்து அங்கிருந்தவரிடம் கேட்டேன் அவர் இங்கிருந்து எப்படி போகவேண்டும் எந்த பஸ்ஸில் ஏறவேண்டும் எங்கு இறங்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்னார்

நான் பேருந்தில் செல்லாமல் நடந்து போகலாம் என்று தீர்மானித்து நடக்க ஆரம்பித்தேன் முதல் பயணம் கம்பீரமான அழகான ஹவுரா பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் நடைபயணம் ஆரம்பமானது

குட்டி ஸ்டோரி தொடரும்.......

 

Wednesday, May 3, 2023

மாடு வளர்க்குரதுன்னா அவ்வளவு ஈசியாபோச்சா

 

மாடு வளர்க்குரதுன்னா அவ்வளவு ஈசியாபோச்சா உங்களுக்கு

என்னால கேப்டன் மாதிரி புள்ளிவிவரமா சொல்லத்தெரியாது எளிமையா சொல்றேன் கேட்டுக்கோ

அது என்ன பையன் படிச்சுமுடிச்சு வேலைகிடைக்கலனா எல்லா அப்பாமார்களும் சொல்றீங்க உன்ன படிக்க வைச்சதுக்கு பதிலா நாலு மாடு வாங்கி மேய்க்க விட்டுருக்க்கலாம்ன்னு

அதே படிச்சு வேலைக்கு போறவன் சம்பளம் கம்மியா வாங்கினா இந்த கம்பெனில வேலை செய்றதுக்கு பதிலா ஒரு நாலு மாடு வாங்கி மேய்ச்சுடலாம்ன்னு சொல்றான்

இது என்ன வியாபரம்ன்னு நினைச்சிங்களா?சிட்டியில மாடு வளர்க்குறேன்னு தெருவுக்கு நாலு பேரு மாட்டு பால கறந்துட்டு பாவம் அதுக்கு தீவனம் இல்லாம தெருவுல இருக்குற குப்பைய மேயவிடுறாங்களே அது இல்ல மாடு வளர்க்குறது

மாடு வளர்க்குதுன்னா மொதல்ல குறைஞ்சது ஒரு 25 சென்ட் நிலமாவது தண்ணீர் வாதியுடன் இருக்கணும்

மாட்டு கொட்டகை தரையில் இருந்து குறைந்தது மூனடி மேடா இருக்கணும்

கொட்டகை கிழக்கு மேற்காக கட்டனும்

மாடு வளர்க்குரதுக்கு முன்னாடி அதுக்கு தேவையான பசுந்தீவனம் தயார் நிலையில் இருக்கணும்

ஒரு கறவை மாடு இன்னைக்கு குறைந்தது 50,000 ஒரு மாடு வைச்சுருந்தா பத்தாது குறைந்தது நாலு மாடாவது வேணும் மாடு வாங்க குறைந்தது கையில் ஒரு லச்சமாவது காசு இருக்கணும்

மாடு வாங்க கொட்டகை அமைக்க இதுக்கு குறைந்தது இரண்டு முதல் மூனு லச்சம் செலவாகும்

அப்படியே மாடு வாங்கினாலும் மாடு வாங்கின உடனேயே கன்று போட்டு பால் கொடுக்காது

அது கன்று போடுகிற வரைக்கும் அதற்கு தீவனம் மேச்சல் இப்படி எல்லாத்தையும் செய்யணும்

கன்று போட்டது முதல் மாட்டின் தரத்தை பொறுத்து வருடத்திற்கு குறைந்தது 6-8 மாதங்கள் வரை பால் கொடுக்கும்

ஒரு லிட்டர் பாலின் விலை பால் கொள்முதல் செய்பவர்களை பொறுத்து வேறுபடும் குறைந்தது ஒரு லிட்டர் பால் 28 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு மாடு சராசரியாக காலை 7-9 லிட்டரும் மாலை 5-7 லிட்டரும் பால் கொடுக்கும் இதன் ஒரு நாள் சராசரி என்று பார்த்தால் 13 லிட்டர் ஒரு லிட்டர் பாலின் விலை சராசயாக 25 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 325 ரூபாய் ஒரு மாட்டின் மூலம் கிடைக்கும், நான்கு மாடுகள் என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக 1,300 ரூபாய் ஒரு மாதத்திற்கு 39,000 ரூபாய்

இதுல நாலு மாடுகளும் ஒரே மாதிரி பால் கொடுக்குமான்னா இல்ல வேறுபடும்

இது பாலின் மூலம் கிடைக்கும் பணம் இது சும்மா கிடைச்சுடாது

காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யணும் சாணிய எடுத்து ஒரே இடத்தில் போடணும்

மாட்டுக்கு தேவையான பசுந்தீவனம் கொடுக்கணும் பசுந்தீவனம் இடம் இருந்தால் அதில் விளைய வைத்து கொடுக்கலாம்

அது மட்டும் கொடுத்தா போதாது வைக்கோல் வாங்கனும் ஒரு வைக்கோல் கட்டு 250 ரூபாய்  இன்னைக்கு விலை,வாங்கினா ஒன்னு இரண்டு எல்லாம் வாங்க முடியாது ஒரு டிராக்டர் கட்டு வங்கனும் அதுக்கு குறைந்தது 15,000-20,000 ரூபாய்

அடுத்து அடர் தீவனம் கொடுக்கணும் ஒரு மூட்டை குறைந்தது 1200-2000 வரை விக்குது

இதெல்லாம் போக காலை 9:00-10:00 மணிக்குள்ள மாட்ட மேய்க்க கூட்டிட்டு போகணும்

சும்மா பேருக்கு மேய்க்க கூடாது மாடு நல்லா இரையை எடுகுதான்னு பாக்கணும் வெயில நாம பாத்தா மாடு சரியா சாப்பிடாது

மழை காலத்தில் சரியாக மேய்க்க முடியாது அப்படி பட்ட நாட்களில் பசுந்தீவனும் அடர் தீவனமும் கையில் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும்

மதியம் மேய்ச்சலில் இருந்து கூட்டி வந்து நல்ல நிழலில் கட்டிவைத்து நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்கணும்

காலை மாலை பால் காரர் சரியாக பால கரக்குரான்னு பாக்கணும்

எல்லாத்துக்கும் மேல இரவு மாடு அசை போடுதாணு பாக்கணும்

அதுக்கு உடல் நலம் ரொம்ப முக்கியம் சாதாரண சளி பிடித்திருந்தாலும் கால்நடை மருத்துவரை அழைத்துவந்து காட்டி அதுக்கு முறையா மருந்து கொடுக்கணும்

நமக்கு உடம்பு சரியில்லனா நமக்கு தெரியும் நாம டாக்டர பாக்க போவோம் ஆனா இவைகளுக்கு சொல்லத்தெரியாது நாமதான் சரியா கவனித்து மருத்துவம் மருத்துவரின் ஆலோசனை படி முறையா செய்யணும்

சில நேரங்களில் கன்று ஈனும் நேரத்தில் மாடு இறந்துவிடும் அது எவ்வளவு பெரிய துயரம் தெரியுமா?

ஒரு மாடு வைச்சிருந்தாலும் சரி நாலு மாடு வைச்சிருந்தாலும் சரி ஒரு நாளைக்கு குறைந்தது காலை இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் நாம் நேரிடையாக அவைகளுடன் நேரம் செலவிடனும்

சுருக்கமா சொல்லனும்னா மாடுகள் வியசாயிகளின் வாழ்வாதாரம்

மாடுகளை அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள்

நீ நினைக்குறமாதிரி வெறும் பாலுக்காக யாரும் வளர்க்கல

.இனி மே யாராவது பையன படிக்க வைச்சதுக்கு பதிலா நாலு மாடு வாங்கி விட்டிருக்கலாம்ன்னு சொன்னிங்க நடக்குறதே வேற 

மாடு வளர்க்குறது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல

உன்கிட்ட சொன்னது கொஞ்சம்தான் நீ ஒரு மாடு வாங்கி மேச்சு பாரு அப்ப தெரியும் உனக்கு மாடு வளர்க்குரதுல இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு

சும்மா கோட்டு சூட்டு போட்டுகிட்டு ஏசில உக்காந்துகிட்டு சம்பளம் வாங்குறதுள்ள புரியுதா.


Thursday, April 20, 2023

நவீன பராசக்தி

முன்னுரை: 

இது எழுதி ரொம்ப நாட்கள் ஆகிறது இங்கு இன்றுதான்(20/04/23) பதிவிடுகிறேன்

பராசக்தி கான்செப்ட் ரொம்ப வருடமாக  மனதில் ஓடிக்கொண்டிருந்தது மேலும் சரியான கான்செப்ட் இல்லாததால் இவ்வளவு வருடம் ஆகியிருக்கிறது இந்த நவீன பராசக்தி

மேலும் இதில் இரண்டு பேரை பற்றி பேசவே விரும்பினேன் நான் பெண்களை மதிப்பவன்  பெரும்பாலும் பெண்களைப்பற்றி தவறாக கருத்தியல் சொல்லி பழக்கமில்லை அதனால் அதை பற்றியதை சொல்லவில்லை

பொதுவாகவே பெண்களுக்கு பேராசை குணம் இயற்கையிலேயே உள்ள சுபாவம் அது அவரவர் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றார் போல் மாறும், பெண்களால் அதிகம் நான் பாதிக்க்கப்பட்டிருந்தாலும்  அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இதை விடியோவாக பதிவிடவே விரும்பினேன் ஆனால் உண்மையான முழு வசனம் ஐந்து பக்கம் நேரமும் அதிகம் மேலும் சிவாஜி நடித்த பாத்திரத்தில் இமிடேட் செய்ய மனமில்லை அதனால் இதை பதிவாக போடுவதே நல்லதாக தோன்றியது.

நவீன பராசக்தி 

நீதி மன்றம் பல விசித்திரம் நிறைந்த  வழக்குகளை சந்தித்திருக்கிறது,புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது ஆனால் இந்த வழக்கு விசித்திரமானதுமல்ல ஆனால் வழக்காடும் நான் விசித்திரமான மனிதன்.

வாக்கைப்பாதையிலே சர்வசாதாரணமாக தென்படக்கூடிய மனிதன் அல்ல நான்  

வேலை செய்த இடத்தில் இருந்து சொல்லாமல் போனேன் போனை எடுக்கவில்லை குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்,நீங்கள் எதிர்பார்க்கிறிகள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை நிச்சயமாக இல்லை.

வேலையை விட்டு போனேன் வேலை செய்யக்கூடாதென்பத்ர்க்காக அல்ல மனசாட்சியை அடகுவைத்து வேலை செய்யக்கூடாதென்பதற்காக. .

மருத்துவம் என்னும் பெயரில் அங்குள்ளவர்களை மன நோயாளியாக ஆக்கிக்கொண்டிருந்தான் அதை வெளி உலகிற்கு சொல்லவேண்டும் என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை?உலகில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்?

நானே பாதிக்கப்பட்டேன்,நேரிடையாக பாதிக்கப்பட்டேன்,சுயநலம் என்பீர்கள் ஆம் என் சுயநலத்திலும் பொது நலம் கலந்திருக்கிறது.

எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தன்னுடைய வாழ்வாதாரத்திர்க்காகவும் தன்னுடைய  சந்ததியினருக்காகவும்  மனித கழிவுகளை மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்கிறார்களே சுயநலமில்லா மனிதர்கள் அவர்களைப்போல,

 

என்னை குற்றவாளி என்கிறார்கள் இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையில் கொஞ்சம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள பாதைகளில் என்னால் எத்தனை பேர் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியும்.

சுயநலமுள்ள மனிதர்கள் நிறைய பேரை பார்த்திருக்கின்றேன்,

என்னால் லாபமடைந்த முதலாளிகள்தான் அதிகம்,

பெண்களை தவறாக பார்த்ததில்லை தவறாக பழகியதுமில்லை ஆனால் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்,

கேளுங்கள் என் கதையை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ் நாட்டிலே முத்தமிழ்ச்சங்கம் தோன்றிய பாண்டிய நாட்டிலே பிறந்தவன் நான்,பிறந்தது ஒரு ஊர் பிழைக்க ஓர் ஊர்

சென்னை என் உயிரை வளர்த்தது உயர்ந்தவனாக்கியது

முதல் திருமணம் விவாகரத்தில் முடியவே திருமணமே வேண்டாமென இருந்த நான் பத்து வருடங்களுக்குப்பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தால் இணையத்தில் பெண் பார்த்தேன் ஒருத்திக்கு என்னை பிடித்திருந்தது இருவரும் காதலித்தோம் ஒரு நாள் அவளும் என்னை பார்க்க வந்தாள் நானும்  அவளை சந்திக்க மதுரைக்கு பைக்கில் சென்றேன்,

ஆம் காதலுக்கு வயது ஒரு விதிவிலக்கல்ல

காதலில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்

பெற்றோரை எதிர்த்தேன்,

உறவுகளை பறிகொடுத்தேன்,

நல்ல நட்புகளை இழந்தேன்,

பசியால் திரிந்தேன் மெலிந்தேன்

கடைசியில் காதலால் பைத்தியமாக மாறினேன்

 

 

இவ்வளவவிற்கும் காரணம் இதோ நிற்கிறானே பிச்ச இவன்தான்

வேலை செய்த எனக்கு சம்பளம் கொடுத்தானா?இவனைப்போன்ற கயவர்களுக்கு  ஓசியில் வேலை செய்யவா என் பெற்றோர் என்னை பெற்று படிக்க வைத்தார்கள்?

இவன் செய்த குற்றம் கொஞ்ச நஞ்சமல்ல மருத்துவம் என்னும் பெயரில் அங்கு வரும் நேயாளிகளை இவனுடைய சுயனலனுக்ககா  அவர்களை மன நோயாளிகளாக மாற்றினான்

இவன் பேச்சை கேட்காத நோயாளிகளை இரும்பு பைபுகளால் அடித்தான்

இவனுக்கு அடிக்க அதிகாரம் யார் கொடுத்தது இன்னும் ஒரு படி மேல் சென்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை கொடுத்து அவர்களை முழு மன நோயாளிகளாக மாற்றினான்

    அதுமட்டுமா? இவன் வாங்கும் பணமோ அதிகம் ஆனால் இவன் ஒரு பேராசைக்காரன் அதனால்

ரேசன் கடையில் திருட்டுத்தனமாக அரிசி, பருப்பு வாங்கி அவற்றை சமைத்து போடுகிறான்

இவனால் பாதிக்கப்படவர்கள் நிறைய பேர் அதில் ஒருவன் இவனைப்பற்றி சமுக வலை தளத்தில் பதிவிட்டான் என்ற காரணத்திற்காக   சூழ்ச்சியால் பிடித்து கட்டிப்போட்டு அடித்து அவனிடம் 150 ருபாய் பத்திரத்தில்

கையெழுத்து வாங்கி அதன்பிறகு அவன் தாயிடம் ஒப்படைத்தான்

 

இவற்றையெல்லாம் நான் வெளியில் சொல்லிவிடுவேன் என்பதற்காக என்னையும் சூழ்ச்சியால் அடைக்க நினைத்தான்

ஓடினேன் அவனுக்கு பயந்தல்ல அவன் செய்தவற்றை எப்படியாவது வெளி உலகிற்கு சொல்லவேண்டும் என்பதற்காக

அவன் விடவில்லை சூழ்ச்சி மேல் சூழ்ச்சி செய்தான் என் பெற்றோரிடம் நான் மன நோய்க்கு ஆளாகியிருக்கிறேன் என்றெல்லாம் சொன்னான்

அவர்களும் என்னை பிடிக்க முயற்சி செய்தார்கள் முடியவில்லை

 

ஓடினேன் எங்கு போவதென்றே தெரியாமல் ஓடினேன், விட்டானா இவன் என் நண்பனிடம் சொல்லி பிடித்துதர முயற்சி செய்தான் முடியவில்லை இறுதியில் என் காதலியிடம் சொல்லி பிடிக்கபார்த்தான்

 ஆனால் அவனால் என்னை பிடிக்க முடியவில்லை இறுதியில் என் பெற்றோரை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்திருக்கிறான் இந்த சண்டாளன்

இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்

உண்மையில் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவன் இவன்தான் ஆனால் நிற்பதோ எந்த தவறும் செய்யாத நான்

இவனைப்போன்றோற்கு அனுமதி வழங்கியது யார் குற்றம்?லஞ்சம் வாங்கிக்கொண்டு எதையும் முறையாக ஆராயாமல் அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் செய்த குற்றம்

லஞ்சம் வாங்குவோர் மீது கடுமையான சட்டம் போட்டிருக்கவேண்டும் அதுமட்டுமல்ல லஞ்சம் கொடுப்பர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்திருக்கவேண்டும் செய்தார்களா?

அன்று அரசு அதிகாரிகள் முறையாக நேர்மையாக நடந்திருந்தால் இன்று இவனைபோன்றோர் முளைத்திருப்பர்களா?

பலரும் இவனால் பாதிக்கப்பட்டிருப்பார்களா?

கடுமையான சட்டம் இயற்றப்படாமல் குற்றங்கள் கலையப்படாதவரை எனைபோன்றோர் இங்கு முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்

இதுதான் என் வாழ்கையின் எந்தபக்கம் புரட்டினாலும் காணப்படும் அனுபவம்,பயனுள்ள அரசியல் தத்துவம்.

நன்றி.


Monday, January 4, 2021

 அனைவருக்கும் 2021 இனிய ஆங்கில புத்தாண்டாண்டு நல்வாழ்த்துக்கள்!

கிட்டத்தட்ட 2017 க்குப்பிறகு திரும்ப எழுத வந்திருக்கிறேன்.....

கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் முதலில் சிறு தொகுப்பாக இருக்கும் விரைவில்.......